பாஸ்கரசேதுபதி (1868-1903)

பாஸ்கரசேதுபதி (1868-1903)

அறிமுகம்
பாஸ்கர சேதுபதி இராமநாதபுரம் ஜமீனின் ஜமீந்தார் ஆவார்.இவரது தந்தையான முத்துராமலிங்க சேதுபதி இறக்கும்போது அவரது மூத்த மகனான பாஸ்கர சேதுபதி ஐந்து வயது பாலகனாக இருந்தார். இதனால் பிரித்தானிய அரசால் இராமநாதபுரம் ஜமீன்தாரி நிர்வாகமானது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரச குடும்பத்தையும் பராமரித்து வந்ததனர். ஆங்கில அரசாங்கத்தார் பாஸ்கர சேதுபதிக்கும் அவரது தம்பி தினகர சேதுபதிக்கும் கல்வி புகட்டுவதற்காக இந்தச் சிறுவர்கள் இருவரையும் சென்னைக்கு அனுப்பி ஆங்கில ஆசான்கள். தாதிமார்கள், பணியாட்கள் ஆகியோரை அவர்களுக்கென நியமித்து முறையாகக் கல்வி பெற ஏற்பாடு செய்தனர். கி.பி. 1888இல் பாஸ்கர சேதுபதி சென்னை கிறித்தவக் கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளி வந்தவுடன் இராமநாதபுரம் ஜமீன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

தமிழ் மற்றும் சமுதாயப் பணி
இவரது 12 வருட நிர்வாகத்தில் பல கண்மாய்களும், நீர்ப்பாசன ஆதாரங்களையும் பழுது பார்க்க ஏற்பாடு செய்தார். பெரும்பாலும் சமஸ்தானத்தின் பல பகுதிகளுக்கும் சாலை வசதி இல்லாத அந்தக் காலத்தில் பல்லக்கிலே பயணம் செய்து மக்களது வாழ்க்கை நிலையையும், தேவைகளையும் அறிந்து வந்தார். இவர் சிறந்த சைவ சித்தாந்தியாக இருந்து வந்ததால் இராமநாதபுரம் சீமை சமஸ்தான கோவில்களில் ஆகம முறைப்படி வழிபாடுகளும் விழாக்களும் நடந்து வர ஏற்பாடு செய்தார்.பாஸ்கரசேதுபதி தமிழ் இசையிலும், தமிழ் இலக்கியத்திலும் பயிற்சியும் ஈடுபாடும் மிகுதியாக இருந்தது. மதுரையில் இன்றைய நான்காம் தமிழ்ச் சங்கம் உருவாகக் காரணமாக இருந்தார். தமிழ்க் கல்லுாரிகள் இளநிலை வகுப்பில் தமிழ்த் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கம் வழங்கும் வகையில் அறக்கட்டளை அமைத்து தமிழ் நிலைபெறத் துணை நின்றார்.சிகாகோ நகரில் நடந்த உலகச் சமய மாநாட்டிற்கு வீரத்துறவி விவேகானந்தரை அனுப்பி, அவருடைய உயரிய அறிவாற்றலை உலகோர் அறியும்படி செய்த பெருமை, மன்னர் பாஸ்கர சேதுபதியை சாரும். 

படைப்புகள்
இவர் தன் ஆஸ்தான புலவராக இரா. இராகவையங்காரை வைத்திருந்து அவரை ஆதரித்து உரிய மரியாதைகளை செய்தார். இவர் பாடல் இயற்றும் ஆற்றல் கொண்டவர். இவர் இயற்றிய பதிகங்களில் ஆலவாய்ப் பதிகம், இராமேஸ்வரர் பதிகம். காமாட்சி அம்மன் பதிகம், இராஜேஸ்வரி பதிகம் ஆகியன மட்டும் கிடைத்துள்ளன.இந்த மன்னர் கல்லிடைக்குறிச்சியில் உள்ள திருவாவடுதுறை மடத்திற்குச் சென்றிருந்தபோது 27.12.1903 இல் காலமானார்.

விருதுகள் /சிறப்புகள் 

 பாஸ்கர சேதுபதி மன்னரை புகழ்ந்து சேதுபதி கல்லாடக் கலித்துறை, பாஸ்கரபதிகம், பாஸ்கர சேதுபதி இரட்டை மணிமாலை, சேதுபதி நான்மணிமாலை ஆகிய சிற்றிலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. மன்னர் பாஸ்கர சேதுபதியின் சிறப்பினை பாராட்டி மத்திய அரசு 2004ல் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டு சிறப்பு செய்தது.